Sunday, 29 December 2013

திரும்பிப்பார்க்கிறேன் 2013....

நாளை புதிய வருடம்.

நேற்றுப்போல இருக்கிறது இரண்டாயிரத்து பதின்மூன்று(2013) ஆரம்பித்து... 

காலத்தின் வேகத்தோடு ஓடமுடியாமலும் ஒதுங்கிப்போக முடியாமலும் அந்தரித்த ஒரு நிலையுடன் ஆரம்பித்த அந்த வருடத்தின் முதல் நாளை, முதல் மணித்துளியை நினைத்துப்பார்க்கிறேன். 

மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையேதுமின்றி வரவேற்க துணிந்த அந்த முதல் மணித்துளியில், எதோ ஒரு புரிந்துகொள்ளமுடியாத உணர்வின் உந்துதலால் சிவாஸ் உடன்   (CHIVAS REGAL) ஆரம்பித்த அந்த வருடம் குறித்த பயம் பதற்றம் எதுவுமின்றி இன்று அந்த வருடத்தினை பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது. 

இந்த சிரிப்பின் பின்னால் பலவலிகள் இருந்தாலும், நல்ல சில  மறக்க முடியாத நிகழ்வுகளும் இருக்கின்றன. 


  யாரை சந்திக்கவேண்டும், அவருடன் உரையாட வேண்டும்  என்று அதிகம் ஆசைப்பட்டேனோ அவருடன் உணவருந்தும் ஒரு சந்தர்ப்பமே கிடைத்து. படைப்பாளிகள் குறித்த விம்பம் உடைந்துபோன கணங்கள் அவை. அவரின் உதவியுடன் என் இருத்தலின் முதல் அத்தியாயம் எழுதப்பட்ட மறக்கமுடியாத ஆண்டாகவும்,

   இன்னும், முகமே கட்டாமல் இருந்த என்னில், என் சார்ந்த ஒரு அறிமுகமும் இல்லாமல், என் ஒவ்வொரு கட்ட நகர்விலும் அக்கறையெடுத்து என்னை நகர்த்திய மூத்த ஒரு படைப்பாளியின் ஆதரவினை, பேரன்பினை முழுமையாக அனுபவித்த ஒரு ஆண்டாகவும்,

இதுவரை பரிசுகளோ நினவுப்பகிர்வுகளோ கிடைக்காத எனக்கு ஒரு புத்தகம் நினைவுப்பரிசாக கிடைத்ததுடன்  நல்ல நண்பர்களின் அறிமுகமும் கிடைத்த காலமாகவும், 

முகம் காட்டாத என்னில் அன்புடனும் அக்கறையுடனும் இருக்கும் நல்ல பல உறவுகளை ஏற்படுத்தி தந்த ஆண்டாகவும், 

என்னை எனக்கு அறிமுகம் செய்து, என் இருத்தலை பண்படுத்திய பல மூத்தவர்களை அறிமுகம் செய்த ஆண்டாகவும், 

சாம்பல் படர்ந்த வேர்களில் உயிர்ப்பினை உருவாக்கிய, ஒரு நல்ல உறவினை பெற்றுக்கொடுத்த  உன்னதமான ஆண்டாகவும்.. 

எல்லாவற்றையும் தாண்டி என் தனிமையை, என் இயலாமையை, என் கோபத்தை, என்னை, என்னை விட உணர்ந்து, உரிய போதில் விலகியும், நெருங்கியும், தாங்கியும்  அரவணைத்து சென்ற நண்பர்களை  தந்த ஆண்டாகவும்..

கடந்து போய் இருக்கிறது. 
இருந்தாலும், 

மனதில் வறட்சியும், ஏமாற்றங்களும், தனிமையும், உறவுகளிடமிருந்து நீண்ட விலகல், ஒன்றினையும் தினமும் உணர்ந்து, இயலாமையுடன் கழிந்த நாட்களே  அதிகமாய்  தெரிகின்றன..ஆரம்ப அந்த மணித்துளியில் தொட்டதை அன்றே விட்டு விட்டாலும் தொட்டதற்கான காரணங்கள் என்னவோ அப்படியே தான் இருக்கின்றன... 
நம்பிக்கையுடன் நாளை எதிர்கொள்ள போகிறேன்.

விடைபெறும் ஆண்டே 
விதைத்து விட்டு போகிறாய் 
பலவற்றை என் வயல்களில்...

அறுவடைக் காலத்திற்காய் 
காத்திருக்கும் வலிமையையும் 
விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் 
தந்துவிட்டு போ....

வானம்பாடிகளும் 
வண்ணத்துப் பூச்சிகளும் இளைப்பாறிப்போகும் 
சோலையாய் மாறிவிடுகிறேன்.

5 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  சிறப்பாக உள்ளது.. பதிவு.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வெகு சிறப்பான சிறப்புப் பதிவு
  குறிப்பாக கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சோகங்கள் நிறைந்த பையில் நயா பைசா கூட இல்லாமல், 5 வருட காதல் முறிந்து ஒதுக்கப்பட்ட விரக்தியுடன், மாடாய் உழைத்து நிறுவனத்தில் இருந்து பணி இழப்பு செய்யப்பட்டும், உயர்கல்வி சீட்டு கடைசி நேரத்தில் பறிபோய் உங்களைப் போல எழுதுகோலும் சிவாச் றீகலும் மட்டுமே உற்ற துணையாய் தனிமை வலியுடன் தொடங்கிய 2013, இழந்தவைகளில் கொஞ்சம் மீட்கப்பட்டு நம்பிக்கை கீற்றை ஆழ்மனதில் கீறி விதைக்கப்பட்டு கடந்துவிட்ட பொன்னாண்டு எனக்கு. ! பாடங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொடுத்த படிப்பினைகள் என இணையத் தோழமையும் எழுத்தும் என்னை ஆசுவாசப்படுத்தியது என்றால் அது மிகையில்லை என்பேன்.

  --- விவரணம். ---

  ReplyDelete
 4. வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete