Thursday 2 January 2014

வண்ணாத்துப் பூச்சிகள் மீண்டும் இளைப்பாறும்

விடைபெறும் ஆண்டே 
விதைத்து விட்டு போகிறாய் 
பலவற்றை எம்  வயல்களில்...

அறுவடைக் காலத்திற்காய் 
காத்திருக்கும் வலிமையையும் 
விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் 
தந்துவிட்டு போ....

கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் 
கலைந்த கனவுகளின் ஓலங்களும் 
பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக,

ஏக்கங்களும் ஏமாற்றங்களும் 
யுகாந்திர காத்திருப்புக்களும் 
மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக,

இயலாமை சுமந்து 
விடை கொடுக்கிறோம். 

கருவழிந்த காலத்தின் குறியீடே... 

உயிர்ப்பினை ஒளித்துவிட்டு 
சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில்
மோதட்டுமுன்  ஊழியின் பெருங்காற்று.

மக்கிப்போகாத எலும்புகள் மீதும் 
மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் 
இறங்கட்டுமுன்  பிரளயம்.

இனி 
பகை கொண்டநிலம் மேவி 
நிறைகொண்டு தமிழ் எழுந்திட  
வானம்பாடிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் 
இளைப்பாறிடும் சோலையாகட்டுமென் தேசம். 

காலத்தின் திசுக்கள் மீது எழுதட்டும் 
கருவழிந்த கதையையும் 
மீள கருப்பெற்ற கதையையும்....



1 comment:

  1. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete