Wednesday 19 February 2014

இழப்பின் வ(த)ளர்வு

பாதச் சுவடுகளால் 
கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. 

நிசப்தங்கள்
நிறைந்துகிடக்கும்..

முல்லையும் பூவரசும்
கருமை பூண்டு  கனத்து நிற்கும்

ஓணான்களும் அறணைகள்
அமைதிக்குள் நகரும்..
குயில்களும் புலுனிக் குருவிகளும்
அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்..

முழுதும் முழுதும்
வற்றிப் போயிருக்கும்,
நேற்று
நீ இருந்த முற்றம்...

நேர காலமின்றி
வரவுகளால் நிறைந்திருந்த
முற்றம் அது..

தூணிலும்
கதவிலும் படிந்த கருமை
நிழல்களை தோற்றுவிக்கும்
யாருக்காவது
இப்போது...

நீ பிரிந்தபின்
மொழியின் இனிமை தொலைந்து போனது
விழியின் வெளிச்சம் கலைந்து போனது

வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து 
வளர்ந்து கொண்டிருக்கின்றன
என் நினைவுகளும் கனவுகளும்...

அந்த முற்றத்தில் நீ
சிந்திச் சென்ற மௌனங்களும்
சலனமில்லாத கடைசிப் பார்வைகளும்
இன்னும் அலைந்துகொண்டிருக்கும்
என்னைப் போலவே...

அம்மா.....


1 comment: