Wednesday 26 February 2014

ஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...

எனக்குள் சிரித்துக்கொண்டே கோழியினை வெட்டிக்கொண்டிருந்தேன் கடையில்,
..
நீண்ட நேரமாக கவனித்திருப்பான் போல 
பக்கத்தில வந்து "கோழியைப் பார்த்து எதுக்கு சிரிக்கிறாய்" என்று கேட்டான் வெள்ளை... 

"அட போடா உனக்கு எங்கே புரியும்... எனக்கும் கோழிகளுக்குமான உறவு" என்று மனதுக்குள் எண்ணியபடி பெருமூச்சுடன்  "ஒன்றுமில்லை" என்றுவிட்டு வேலையை தொடர்ந்தேன். 

எனக்கு ஊரில் இன்னொரு பேர் கோழிக்கள்ளன். 
எனக்கு மட்டுமல்ல, இன்னும் சிலர் இருக்கினம் இந்தப் பேருடன்.. 

கோழி மட்டுமல்ல, 
வாழைக்குலை அதுவும் கப்பல்குலை மட்டும் தான். இளநி என கால, நேர, சந்தர்ப்பத்தை அது  பொறுத்து மாறிக்கொண்டிருக்கும்...

வாழைக்குலை வைக்க கோவில் பூக்கொல்லை.
கோழி சமைக்க பழைய மடம் 
இளநி குடிக்க வயல் குளம், மைதானம் அல்லது வத்தாக் கிணற்றடி.

ஒரு மழை இரவில் பத்துக்கு கோழிகள்... 

இஞ்சையும் கோழி வேண்டி கவனிக்கவும் வேண்டித்தான் சமைக்கிறோம்.அந்த கோழிக்கு இணையாக  ருசி இல்லையே..அன்றெல்லாம் வெறும் உப்பவியல்தான்.. 
அதென்ன ருசி.. எப்பவாது தூள் கிடைத்தாலும் பான் வேண்ட முடியாது பான் வேண்டினால் அதை வச்சே பிடிச்சுடுவாங்கள்... சங்கம் இதுதான் என்று.. 

தப்புத்தான் அதெல்லாம் தப்புத்தான்.
ஆனால் அந்தநேரம் தெரியல்லையே...... சொல்லியும் புரியல்லையே..

பொதுவாக எங்களின் இலக்கு, கூட படித்த பெட்டையள் வீடு அல்லது அதிகமாக அடிக்கிற வாத்திமார் வீடு.. 

அவையளிந்த திட்டுகளால் தான் படிப்பும் வராமல் போச்சோ என்றும் யோசிக்கிறனான்.. 
ம்ம்ம்ம் என்ன செய்ய...

கோழி பிடித்தல் என்ன சாதாரன நிகழ்வா... 

நாயை பேக்காட்டனும்.. 
வீட்டுக்கதவை இறுகி கட்டனும்..
கொய்யாவிலோ, நெல்லியிலோ கோழி இருக்குது என்று தேடிப் பிடிக்கணும்.. 
உண்மையை சொன்னா என்ன... 
மழை நேரமென்றால் நல்ல வசதி... 
கோழியின் மல வசம் அப்படியே "இங்க வா இங்க வா"என்று கூப்பிடும் பாருங்கோ.. 

கோழி இருக்கிற கொப்பை குறித்து வைக்கணும்..
அந்த உயரத்துக்கு அந்த வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை தேடி எடுக்கணும்.. 
பொதுவாக கொய்யாவில் கோழி இருந்தால் இலகு.. 
நல்லா வளைஞ்சு தரும் என்ன கொய்யா.. 

இவ்வளவும் முடிச்சுட்டு நிக்க, 
சிலநேரம் வீட்டுக்காரன் அசுமாத்தம் கண்டு கத்தத் தொடங்குவான் பாருங்கோ... 
அந்த நேரம் வாற கடுப்பை சொல்ல முடியாது.

எல்லாம் முடிச்சு வெற்றிகரமாக கோழிக்கு கிட்ட கையை கொண்டு போக 
"காச்சு பீச்சு" என்று கத்திக்கொண்டு கோழி பறந்துவிடும்.. 
கோழி பறக்க நாய் கத்த தொடங்கிவிடும்..
பக்கத்து வீட்டுக்காரன் லைற் ஐ போட்டு விடுவான் 

எல்லாம் போச்சு என்று பாயவேண்டியதுதான்.. 
ஆனால் லைற் போட்ட வீட்டுக்காரன் ஓடு ஒரு பத்தாவது உடையும்...

ஆனால் வாழைக்குலை இளநி எல்லாம், சுகமான இதமான உடனே முடிச்சுக்கொண்டு வற அலுவல் என்ன 

வாழையை மெல்லமாக சரிவை பார்த்து அரிய, கொஞ்சம் கொஞ்சமாக வாழை சரியும். அப்படியே குலையை ஏந்திப்பிடித்து வெட்டி எடுத்துக்கொண்டு போடுவம்.. 

என்ன அடுத்தநாள், சரத்தில கயர் இருக்கும்..பொடியளுக்கு எப்படியும் தெரிந்துவிடும்.. 

ஒரு வீட்டான் வாழைக்குலையை வெட்டி வயல் காவலுக்கு கட்டிய கொட்டிலுக்கை வச்சுட்டு அடுத்தநாள் வாழையின் சொந்தக்காரனுக்கே சொல்லிவிட்டு, கொட்டில்காரனோடு அடிபட விட்ட நிகழ்வுகளும் இருக்கு... 

இப்பவும் இருந்திட்டு யோசிக்கிறனான் 
உந்த பாம்பு, பூரன் பூச்சியள்  எல்லாம் அந்த நேரத்தில கடிச்சிருந்தால் என்ன நிலை.. 

இருந்தாலும் 
உதெல்லாம் செய்யாவிட்டால் அதென்ன இளமைக்காலமா ?
என்று என்னையே தேற்றிக் கொள்வதும் உண்டு. 

கோழியை களவெடுத்து தின்றுவிட்டு மறுநாள் கோவிலில்,மைதானத்தில் அல்லது நூலகத்தில்  ஏதாவது வேலைசெய்கிற நேரம் பார்த்து கோழிக்காரன் வந்து திட்டுவான் பாருங்கோ 

அசைவமா என்ன நாங்கள்.
ஆளையாள் பார்த்துவிட்டு "அட எங்களையா என்ற சலிப்போடு தொடருவோம். 

ஒன்றுமட்டும் சத்தியமா சொல்லமுடியும்.. 
களவென்று எடுத்தவை எல்லாம் தின்று முடித்திருந்தோம்...
ஒன்றும் வீனாகிப் போயிருக்காது. 

ஊரில திரிந்த மட்டும் நாளைக்கு என்ன என்றோ நேற்று என்ன என்றோ யோசிச்சதில்லையே... 

நிலம் தின்றவங்கள்  உயிர் தின்னத்தொடங்க.. 
ஒருநாள் ஒருநாள் என்று எங்களுக்குள்ளும் ஒருவனை தின்றுவிட, 
ஆளுக்காள் ஒவ்வொரு பக்கம் சிதைந்து போனோம்.. 

இப்ப எப்பவாவது 
கதைத்துக்கொள்கிறோம்.
சிரித்துக்கொள்கிறோம்.
அப்போதெலாம்.. 
இனி அங்கு அப்படி வாழமுடியுமோ என்று ஏங்கிக் கொள்கிறோம்.

இப்பவெல்லாம் எனக்கு ஒரு ஆசை.. 
கோழி பிடித்த.. 
வாழைக்குலை வெட்டிய.. 
இளநி களவெடுத்த....

ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று இருந்து கதைத்து விடைபெறும் போது 

"எணைய் நான் தாணினை அப்ப கோழி பிடிச்சனான் என்று சொல்லணும்"

சுருக்கம் விழுந்த அந்த முகத்தில் ஒரு புன் முறுவல் கலந்த வெட்கத்துடன்  "எனக்கு அப்பவே தெரியுமடா  நீ தான்" என்று அவர்கள் சொல்லும் அந்த அழகை ரசிக்கணும்.. 











1 comment:

  1. இனிய நினைவுகள் தான்... வரிகள் உள்ள ஆதங்கம் + வலி புரிகிறது...

    ReplyDelete