Tuesday 18 March 2014

உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...

விதைகளை தின்னும் தேசத்தில் 
முகிழ்த்தவளே, 
கனவுகளை கருவறுக்கும் 
கொலைவாள்களிடையே எழுந்தவளே..

இழப்பின் வலிகளை 
மொழிகளால் இறக்க முனைந்தவளே 
இழிகாலதில் இறங்கிய 
ஊழியின் மகளே..

குருதி குடிக்கும் பேரினத்தின் 
குரல்வளையில் விலங்கு பூட்டவா
நீ எழுந்தாய் ...
இல்லையே..
அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே
நீ அமர்ந்தாய் வீதியில்...

விபூசிகா...
வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே

உன் 
குரலணுக்களின் தீண்டலால் 
தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் 
கருகி நைந்துபோன திடல்களிலும் 
ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன..

வேரீரமிழந்து 
இலையுருத்திக்  கிளைசிதைந்து போன பெருமரத்தில் 
கூடுகள் அழுகின்றன.

உடல்சுமந்த
குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்..
எட்டப்பர்கள் நாங்கள்தான் தங்கையே.. 

காத்திரு 
என்றெப்படி உரைப்பது
பொறுத்திருக்கும் இக்காலம் வல்லமையில்லாதது...
அழுகைக்கும் கண்ணீருக்கும் தொழுகைக்கும்
அர்ப்பணிக்கப்பட்டவர்கள் நாங்கள்
உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...






2 comments: