Sunday 9 February 2014

ரகசியத்தின் நாக்குகளால் பேசுகிறேன்.....

ரகசியத்தின் நாக்குகள். 

வெளியீடு கண்டுவிட்டது. 

எனது மண்ணில், எனது நண்பர்கள் முன்னிலையில், என்னை வழிநடத்திய நல் ஆசான்கள் முன்னியில், இந்த வெளியீடு  நடைபெற வேண்டும் ஆசைப்பட்டேனோ  அதேபோல, சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற்று முடிந்திருகிறது. நான் கலந்து கொள்ளமுடியாதமைக்கு உங்களிடம் ஆழந்த மன்னிப்பினை கேட்கிறேன். 

ஒரு படியில் அதுவும் முதற் படியில் ஏறி இருக்கிறேன். நீங்கள் கரம்  கொடுத்து ஏற்றிவிட்டிருக்கிறீர்கள்.


இந்த வெளியீடு சாத்தியமானது உங்களால்தான்.

முதலில் உங்கள் அனைவருக்கும் என் அன்புகள்.

கவிதைகளை தொகுக்கும் எண்ணமே இருக்கவில்லை என்னிடம், என் திருப்திக்காக எழுதுவிட்டு என்ன சொல்கிறீர்கள் என்று கவனித்து அதனூடு திருப்தி அடையாமல், உங்களின் கருத்துக்களின் மூலத்தினை உள்வாங்கி அடுத்த படைப்பினை உருவாகிக் கொண்டு நகர்ந்தநாளில் தான்,பதிவர் இனிய சகோ "கலைவிழி"அவர்களும், "கவிஞர் காணவி அவர்களும்"  கவிதைகளை தொகுக்கும்படி கூறினார்கள். 

எனக்குள்ளும் ஆசை வந்தது. 

ஆனால் எழுதியவைகளின் பாங்கு  குறித்த தயக்கம் (இன்றும் இருக்கிறது ) எழவே,விமர்சகரும் ஆசிரியரும் எனது பிரதேசத்தை சேர்ந்தவருமான குனேஸ்வரன் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டேன். 

"தொகுப்பை வெளியிடுங்கள் தரம் குறித்து வாசகர்கள் கருத்து சொல்வார்கள் "என்றார்.

ஆரம்பம் முதலே என் படைப்புகளின் போக்குகளில் மாற்றங்களை எடுத்துகூறி, சீர்திருத்தம் செய்து, அன்புடன் அரவணைத்து ஒரு மகவினை சீராட்டும் தாயைப் போல வளரத்தூண்டிய "அண்ணன் வேலணையூர் தாஸ்" அவர்களிடம் கூறினேன் தொகுக்க விரும்புவதாக, மகிழ்வுடன் எனது படைப்புக்களை  தொகுக்க ஆலோசனைகளை வழங்கினார். 

வாசிப்பினை தவிர்த்து எதுவித அறிமுகமும் இல்லாத நிலையில், முகநூல் வழியாக அறிமுகமாகிய , "நிலாந்தன் அவர்களை" முன்னுரைக்காக தொடர்பு கொண்டேன். ஒரு ஆசிரியர் மாணவனை அரவணைக்கும் பாங்குடன் உரையாடி படைப்புக்காக அறிமுகத்தினை மிக நேசிப்புடன் எழுதித் தந்தார். 

முதல் தொகுப்பு,  இலக்கிய உலகில் எதுவித அறிமுகங்களும் இல்லை. 

தயக்கத்துடன் "ஈழக் கவி வ.அய்.ச  ஜெயபாலன் அவர்களை" என்னை அறிமுகம் செய்யும் வகையில் ஒரு குறிப்பு தரும்படி கோரினேன். ஏற்கனவே இணையங்களில் எனது படைப்புக்களை வாசித்து கருத்துக்களை பகிர்ந்த அவர் உடனேயே எழுதித் தந்தார். 

தொகுப்புக்கான எல்லாம் ஒழுங்கில் அமைந்தவுடன்,

பெரிய சிக்கலாக இருந்தது பதிப்பகம், எங்கே பதிப்பிடுவது என்பதே. 

பதிப்பிடல் தொடர்பில் எதுவித முன் அனுபவங்களும் இல்லாத நிலையில் நட்டாற்றில் தளம்பிக்கொண்டிருந்த எனக்கு, 

வழிகாட்டியாக வந்து கரையேற்றினர் ஷோபா சக்தி அவர்கள். அவரின் உதவி மட்டும் இல்லை என்றால் இவ்வளவு அழகாக எனது படைப்பு தொகுக்கக் பட்டிருக்குமோ, என்பது சந்தேகமே.. இளைய படைப்பாளிகளை வளர்த்துவிடுவதை விரும்பாத இலக்கிய உலகில் இப்படியொரு மனது படைத்த மனிதனா என நெகிழவைத்த படைப்பாளி அவர். (இன்னும் இன்னும் அவரை தொல்லை செய்யும் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன்.)

எழுத்துபிழைகளை திருத்திய பெண்ணிய செயற்பாட்டாளர் கவிஞர் தமயந்தி அக்காவுக்கும், நிவேதா அம்மாவுக்கும் நண்பன் சுபேசுக்கும் இந்த கணத்தில் என் அன்புகள்.

நூல் கையில், 
இனி வெளியீடுதான். 
என்ற நிலை. 

யாழில் தான் வெளியீடு என்ற நிலையில் எதுவித சமரசமும் இல்லாமல் இருந்தேன். 

விருந்தினர் அழைப்பில் சில விட்டுக்கொடுப்புகளை ஏற்கவேண்டிய சூழல். 

நான் அந்த களத்தில் இல்லாமல் மற்றவர்களை சிக்கலில் ஆழ்த்தும் சூழலையும் விரும்பவில்லை. 

ஒரு நல்ல மனிதனை, உணர்வாளனை, சரியான அடையாளப்படுத்தப்படாதவரை, சமூக புறக்கணிப்புகளால் ஒதுக்கப்படும் ஒருவரை, பத்து வருடங்களுக்கு மேற்பட்ட நட்பினை, அழைக்க முடியாமை குறித்து வருத்தமே என்றாலும், இன்றைய சூழலையும்,  நான் அதனை எதிர்கொள்ளாமல் மற்றவர்களை எதிர்கொள்ளவைக்கும் நிலையையும் உணர்ந்து ஒப்புதல் அளித்தேன். 

வெளியீட்டு உரைக்கும், விமர்சனத்துக்கும் தகைமை வாய்ந்த உறவுகளை தேர்ந்து எடுப்பதில், என்னை விட அக்கறை கொண்டிருந்தவர்கள் வேலணை யூர் தாஸ் அவர்களும் நிலாந்தன் அவர்களும். இதில் இருந்தே எனது படைப்பினை அவர்கள் எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்பதனை புரிய முடியும்.

வரவேற்புரை நிகழ்த்தியவர் நண்பன் வினோத், 
இலக்கிய குவிய செயலாளர். 

வெளியீட்டுரை சோ.பத்மநாதன். 

ஈழத்தின் கவிகளுக்குள் முதன்மையானவர் சோ ப. என்று அழைக்கப்படும் சோ .பத்மநாதன் ஐயா. அவர்களைப் பற்றி நான் அறிமுகம் செய்ய வேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஈழம் தாண்டி தமிழ் வாழும் இடங்கள் எல்லாம் அறிமுகமானவர் அவர்.

நூல் விமர்சனம் செய்த 

அ. சிறிகாந்தலட்சுமி (பிரதம நூலகர், யாழ் பல்கலைக் கழகம்)
கு.றஜீவன் 

ஆழமான கருத்தாடலும், தெளிவான பார்வையும் , நுண்ணிய வாசிப்பு திறன்களும் கொண்ட இருவரும் ,என்னை பற்றிய எதுவித அறிமுகங்களும் இல்லாமல்,படைப்புக்காகவும்,வளர்ந்துவரும் இளையதலைமுறைப் படைப்பாளிகளுக்காகவும், அவர்களின் வளர்வுக்காகவும், மிகவும் ஆழமான செயற்பாடுகளை முன்னெடுத்து விமர்சனங்களை மேற்கொள்பவர்கள். 

நிகழ்வில் கலந்துகொள்ளும் யாருடனும் தனிப்பட்ட அழைப்பினை நிகழ்வு முடியும் வரை கொள்வதில்லை என்ற முடிவில் இருந்த என்னிடம் சில கேள்விகள் இருப்பதாகவும் அழைக்கும் படியும் அறிவுறுத்தினார், பிரதம விமர்சகர் அ.சிறிகாந்தலக்சுமி அவர்கள்.

தயக்கங்களுடன் அழைப்பினை ஏற்படுத்திய எனக்கு சிலநிமிடங்களில் அவரின் அன்பான உரையாடல் ஒரு உற்சாகத்தினை தந்தது.சிலநிமிடங்களில் என் படைப்புக்கள் குறித்த ஒரு தெளிவினையும் தந்தது. இன்னும் தொடந்து அவரின் அறிவுரைகளுக்காக காத்திருக்கிறேன். தொடர்பு கொள்ளவும் விரும்புகிறேன்.

நன்றியுரை நண்பன் மதிசுதா. 

ஈழத்தின் திரைப்பட இயக்குனராகவும் நடிகராகவும் ,ஒரு பிரபல பதிவராகவும் தனது பக்கங்களை விரித்துச்செல்லும் இனிய நண்பன். நான் நன்றியுரை செய்வதற்கும், இவன் என்  நண்பன் செய்வதற்கும் எதுவித வேறுபாடுகளும் இல்லை. 

எனது நண்பர்கள் இவர்களைப் பற்றி என்ன சொல்ல... இவர்கள் என்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித் தன்மையோடு இயங்க வைத்தவர்கள். இவர்களைப் பற்றி எதுவும் சொல்ல விருப்பம் இல்லை காரணம் அது என்னைப்பற்றியே சொல்வதாக அமையும். 

குறிப்பிட்டு சொல்வதென்றால் பாடசாலைக் காலங்களில் காதல் கடிதம் மற்றும் பெயரிலி கடிதங்கள்  எழுதுவதில் தொடங்கி, இன்று இந்த தொகுப்பு  வருவது வரை  என்னுடன் இணைந்திருப்பவர்கள் இவர்கள். 

இரகசியத்தின் நாக்குகள் தொகுதி வெளியீட்டினை அடையாளப்படுத்தி, பகிர்ந்தும் கருத்துக்கள் தெரிவித்தும், என்னை உற்சாகப்படுத்தியும் நின்ற என் முகம் தெரியாத முகநூல் நண்பர்கள், இலங்கை ரசிகன் இணையம் ,பொங்குதமிழ் இணையம், வல்வை இணையம், யாழ் இணையம், கொக்குவில் இணையம், மற்றும் நிகழ்வுகளை பகிர்ந்த  இணையத்தளங்கள் என,     இவர்களை நண்பனாக கொண்ட நான் என்றும் என்னை இழந்துவிடப் போவதில்லை.இவர்களின் துணை இருக்கும் வரை எனது இயக்கமும் குறைந்துவிடப் போவதில்லை.

உண்மையில் இவர்களில் நால்வரைத் தவிர என்னை மற்ற இவர்களுக்கும் தெரியாது. 

என்னை நான் மறைத்த காரணம், என்னைப் பற்றிய, என் சார்ந்த விமர்சனங்கள் இல்லாமல் படைப்புக்கள் சார்ந்த விமர்சனங்களை வேண்டியே. 

நூலின் முதற்பிரதி பிரக்ஞை மற்றும்,மரணம் இழப்பு மலர்தல் போன்ற நூல்களை எழுதிய "மீராபாரதி அவர்கள்" பெற்று, என்னை எனது படைப்பை சிறப்பித்திருக்கிறார்.

இந்த தொகுதியில், 

எனது ஊர்சார்ந்த படைப்புகளும்,தனிமனித அவலங்களுமே அதிகம் இருப்பதை நான் அறிந்தே தொகுப்பினை வெளிக் கொண்டுவந்தேன். காரணம் எனது ஊர், மற்றும் அதன் அழகியல் வெளியுலக்கு தெரியப்படுத்தப் படவேண்டும். மற்றையது எனது முதல் தொகுப்பு இது இதில் "நான்"  என்ற குறியீட்டின் தனி அவல ஆவர்த்தனங்களை கூறாமல் என்னால் பொதுவெளியைப்  பற்றி கூற முடியாது என்பதுமாகும்.

காலம் சம்மதித்தால் என் அடுத்த தொகுப்பு நிச்சயமாக குறிப்பிடத்தக்க அம்சங்களை கொண்டே எழும். அது பரந்தும், நிறைந்தும் வாழும் இந்த உலகினை கூறுபோடு பார்ப்பதாக அமையும். இந்த சமூதாயத்தின் மீதான சீற்றமாகவும் அமையும்.

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் என்னுடன் எதோ ஒருவகையில் கருத்தாடி உற்சாகமூட்டிய உங்களுக்கும், நண்பர்கள் கிரிசாந், ஆதிபார்த்தீபன் ,ஞானதாஸ் காசிநாதர் பூங்கோதை செல்வன் இராஜமுகுந்தன்,சஹாரா அக்கா  அவர்களுக்கும் இன்னும்  குறிப்பாக தமிழக நண்பர்கள் அனைவருக்கும்..

இந்த நூலினை அழகாக வடிவமைத்து ஒரு தனித்த அடையாளமாக உருவாக்கிய கருப்பு பிரதியினருக்கும், 

நன்றி சொல்லி உங்களை என்னில் பிரித்து பார்க்க விரும்பவில்லை. 

சமூதாயத்தின் ஒரு கடமையினை நீங்கள் சிறப்பாக ஆற்றி இருக்கிறீர்கள். அதற்காக இந்த சமூதாயம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

என்னை உற்சாகப்படுத்தி தொடர்ந்தும் இயங்க வைக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்புகள்.. .

 நிகழ்வில் இருந்து  சில காட்சிகள்.
   
   


















9 comments:

  1. இனிய வணக்கம் தம்பி நெற்கொழுதாசன்...

    செஞ்சாந்து தமிழ்ச் சொற்களால்
    செம்மாந்த கவிபடைக்கும்
    செங்கோல் கவிஞனே!

    இனிக்குமொரு காவியமாய்
    இயைபாய்த் தந்தாய்
    இரகசியத்தின் நாக்குகளை!

    படித்திடத்தான் துடிக்கிறேன்
    பாவலன் உன்
    பாவிதைகள் ஏற்றத்தினை!

    தீநாக்கு புறந்தள்ளும்
    தீய விடயங்களை
    தீய்த்துப் போடுவாயே!

    புறம்பேசும் நீட்சிகளை
    புழக்கடையில் போட்டு
    புரட்டி எடுப்பாயே!

    நன்னெறிகளை நயமாய்
    நற்சொற்கள் கொண்டு
    நன்மாலை சூட்டுவாயே!

    இந்நிலைகள் ஏதுவாய்
    இந்நூலில் உள்ளதுவோ...
    இந்நாளின் கவிக்கொழுந்தே....!

    செந்நாள் ஒன்றுவரும்
    செவிசாய்க்கும் அவனியெல்லாம்
    செம்புனல் நீரதுவாய்!

    அந்நாள் வருகையில்
    ஆனந்தம் கொண்டிடப்பா
    ஆகிருதி படைத்தவனே!!

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  2. மனம்கனிந்த வாழ்த்துக்கள் தம்பி..
    இன்னுமின்னும் பல்லாயிரம் படைப்புகளை நீவீர்
    நல்கிட எமையாளும் ஈசனிடம் இறைஞ்சுகிறேன்..

    ReplyDelete
  3. உமது நன்றி மறவாத குணமும் பணிவும் உன்னை சிகரங்களில் ஏற்றி விடும் இதை நான் பலரிட்ம் சொல்லியிருக்கிறேன் மீண்டும் சொற்களால் நிரூபித்திருக்கிறாய்
    எதை தருவேன் உனக்கு என்..இதயம் நிறைந்த அன்பை தவிர.-----
    அன்புடன் -வேலணையூர்-தாஸ்

    ReplyDelete
  4. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒநு நூல் வெளியீடு என்பது அவ்வளவு எளிதில்லை. தங்களது பெரும் முயற்சியால் சாத்தியமாக்கியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியும் சந்தோசமும்..

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சி... உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    பல படைப்புகள் படைக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வெற்றியடடைந்துவிட்டீர்கள் அண்ணா
    உரியவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கொட்டான் என்பார்கள்
    நீங்கள் நிகழ்வில் கலந்துகொள்ளாமலேயே இவ்வளவு பெரிய கூட்டம் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறதென்றால் அது சாதாரண விடயமல்ல...

    பிரபல கவிஞரொருவரின் மூன்றாவது நூல் வெளியீட்டுக்கு அக் கவிஞரே சென்று அழைப்பிதழ்கள் கொடுத்தும் கூட அவரின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் 20 க்கும் குறைவானவர்களே. இப்படியானவர்கள் வாழும் இந்த தேசத்தில் உங்களுடைய முதல் ஆக்கத்திற்கு எவ்வளவு வரவேற்புக் கிடைத்திருக்கிறது என்பதை பதிவேற்றிய புகைப்படங்களைக் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

    இன்னும் பல ஆக்கங்களை இந்த தேசத்தில் நீங்கள் வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்
    நிகழ்வினை மிக அழகாக நடாத்திய குழுவினருக்கும் அதற்காக உழைத்தவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  7. வணக்கம்
    பதிவை பார்த்த போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.... இன்னும் பல நூல்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
    வலையுலகில் தொடருங்கள் பயணத்தை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. டேய் தம்பி என்ன இது எங்கள் பெயரெல்லாம் போட்டு... எம் புத்தகம் வெளியிட்ட திருப்தி எமக்கு. அடுத்த வெளியீட்டுக்கு தயாராகு.

    ReplyDelete
  9. அண்ணா எதுவித குறைகளுமற்ற நிறைவான நிகழ்வு ஒன்று. நீங்கள் இங்கிருந்திருந்தாலும் இப்படி நடந்திருக்குமோ தெரியாது :)

    ReplyDelete