Saturday 26 April 2014

எட்டாவது வர்ணம்..

நிலவின் நிர்வானத்தால்  
கடல் தினவு கொள்ளும் இரவுகளில் 
உன்னிரு இதழ்களிலும் வழிகிறது
சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்..

நம் அன்பு
தொலைந்துபோன எட்டாவது வர்ணம்
மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம்

புல்நுனிகளில் திரளும் நீர்
யாருமறியாமல்
எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது
உனக்குள் தொலைந்து போதலும்..



அபத்தப் பொழுதொன்றில்
இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில்
நேசத்தைக் கொட்டிவிட முனைந்து
தோற்றுவிடுதலுடன் நீள்கிறது
நமக்கிடையிலான களவொழுக்கம்..

வியர்வை நாற்றம் அறிய
பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன 
ஓசையிழந்த முத்தங்களும் 
தீண்டல் தவிப்புகளும்
துப்பிவிட்ட நேசங்களும்..

எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண்
முரண்களால்தான்  வாழ்வு வீடுபெறடைகிறது

நம் அன்பு
எட்டாவது வர்ணம்




1 comment:

  1. தகவம் பரிசளளிப்பு விழாவில் உங்கள் சகோதரி
    'ரகசியத்தின் நாக்குகள்' என்ற உங்கள் நூற் பிரதி ஒன்றைத் தந்தார்
    நன்றி
    வாசித்த பின் தொடர்பு கொள்கிறேன்.
    பேஸ்புக்கிலும் நீங்கள் இருப்பதாக ஞாபகம்
    வேறு பேரிலா

    ReplyDelete