Friday 20 March 2015

தனித்திருத்தல்...

தனித்திருத்தல் வரம்.
நீண்ட  இரவில்
ஏதாவது ஒரு மாலையில்
தன் குரல் கேளாத தொலைவில்

எதுவும் தேவையில்லை
நீ நான் அவர்கள்



ஒரு புல்வெளியில்
குளக்கரையில்
குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்..

தனித்திருத்தல் பெரும் தவம்.

இழக்கவும்
ஏற்கவும் எதுவுமில்லாமல்,
கேட்கவும்
சொல்லவும் எவருமில்லாமல்

பெருவெளியொன்றில்
மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல
கிளைநுனியொன்றில்
சலனமின்றிக் கிடக்கும் ஒரு  பறவையைப் போல

தனித்திருத்தல் வரம்
தனித்திருத்தல் பெரும் தவம்.

தனித்திருத்தலில்
ஒரு தற்கொலை நிகழலாம்
ஒருவன் வன்புணர்வை முயலலாம்
தாயொருத்தி
அடிவயிற்றின் வலியோடு
ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம்
எவனோவொருவன்
எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு
காமத்தை கழித்துக் கொண்டிருக்கலாம்
பெண்ணொருத்தி கணவன் போனபின்
படுக்கையை தயார் செய்து காவலிருக்கலாம்

இருந்தாலும்,
எங்காவது யாராவதொருவர்
தனிமையின் பேறடைந்திருக்கலாம்.

1 comment:

  1. தனித்திருத்தலில்
    தனியாளின் எண்ணம்
    ஆளுக்கொரு வண்ணம்
    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete