Sunday, 7 May 2017

சன்னங்களை மூடியிருக்கும் கைகளின் மீது ஓங்கி அறையுங்கள்

 ஆயுதங்களுக்கு கருத்தியல் முக்கியமானதல்ல. ஆயுதங்களுக்கு என் உயிர் பற்றிய அக்கறை கிடையாது அது தட்டும் திசையில் மனிதன், நானாக மட்டுமல்ல கடவுளே ஆனாலும்  சாவு மட்டுமே தீர்ப்பு. எனினும் நான் பேனாவை நம்புகிறேன்
“எஸ்போஸ் (சந்திரபோஸ் சுதாகர், 1975 – 2007)

இந்தக் குறிப்புக்களைவிட வேறு எப்படி எஸ் போஸ் என்ற இலக்கிய செயற்பாட்டாளனை அறிமுகம் செய்து விடமுடியும்.  ஒரு ஊடகவியலாளனாக, பத்திரிக்கை ஆசிரியராக, சஞ்சிகை நிறுவுனராக, எழுத்தாளானாக , கவிஞனாக, போராளியாக என்று ஒரு சட்டகத்துக்குள் அடங்காத இளைஞராகவே  இருந்த எஸ்போஸ்  சிறுகதைகள் கட்டுரைகள் விமரிசனங்கள் நேர்காணல்கள் கவிதை  என இலக்கிய செயற்பாட்டின் அனைத்து பக்கங்களிலும் தன் பேனாவினை பதித்துக்கொண்ட போதிலும் கவிதைகளோடு அதிகம் நெருக்கமானவராவே இருந்திருக்கிறார்.90 களோடு, தமிழ் இலக்கியச்சூழலில் நிலவிய  இலக்கிய பவுத்திரம் உடைந்துபோக ஒரு மாற்றம் நிகழ்கிறது. தமிழ் நாட்டில்  தலித் இலக்கியங்களின் எழுச்சி, ஈழத்தில்  சமூகப் பிரக்ஞ்கையுடன் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதும், வன்முறைகளுக்கு எதிரானதுமான இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், மொழிபெயர்ப்புக்கள் என இன்னொருமுகம் கொள்கிறது. இந்த முகங்கொள்ளலை, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத்தொடங்கிய  எஸ்போஸ், கற்றுக்கொள்வதிலும் அந்த மாற்றங்களூடாக தன்னை வளர்த்துக்கொள்வதிலும் நிலைநிறுத்திக்ககொள்வதிலும் கடும் பிரயத்தனம் செய்திருக்கிறார்,

நிலவு பின் நகர்ந்து பின் நகர்ந்து 
முன்னே இருள் விரிகிறது 
நீ அழிந்துபோகிறாய் இன்னும் 
தொங்கிக்கொண்டிருக்கும் 
மழை இருளின் பின்னால் 
நான் உட்கார்ந்திருந்த பேருந்தின் 
கடைசி இருக்கைக்கு நேரான கண்ணாடிக் கதவு 
இன்னும் திறக்கப்படவே இல்லை 
(நிலம் இதழ் 1999 )  
என்ற கவிதையின் புரிதல்கள் அவர் பயணப்பட்ட இலக்கியத்தின் நீட்சியை எடுத்துக்காட்டுகின்றன.

  எஸ்போஸ் என்ற படைப்பாளியை கவிதையூடாகவே, ஒரு கவிஞர் என்ற அளவில் அறிந்திருந்தேன்.  ஆனால் எஸ்போஸ் படைப்புக்கள் என்ற தொகுப்பு கிடைத்தபோது இலக்கிய சமூக செயற்பாட்டு  தளத்தில்    அவர் நிகழ்த்திய போராட்டங்களும், வெற்றிகளும்,  அவருடைய ஆளுமையும் இன்னொரு பரிமாணமாகவே இருந்தது.

சிறுகதைகளை எழுதி இருக்கிறார். பத்திகள் அரசியல் கட்டுரைகள் நேர்காணல்கள் விமர்சனங்கள் என தொடர்ச்சியாக இலக்கியத்தின் பக்கங்கள் எல்லாவற்றிலும் இயங்கி இருக்கிறார்.  அலைவுகளும் அழிவுகளும் பிரிவுகளும் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தை, அதிகாரமும்,  அதிகார வன்முறையும் எல்லாத்தரப்பாலும்   நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த   காலத்தை, அந்தக் காலத்தில் தம் வாழ்வியலை இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குற்படுத்தப்பட்ட சராசரி மக்களின் காலங்களை தன் பிரதிகளூடாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார். 

ஒரு நிகழ்வுணர்வை அனிச்சையாக மீட்டெடுக்கும்  கவிதைகளை எழுதியிருகின்ற எஸ் போஸ் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் செறிவும் தருணமும் உருவாக்குகின்ற விளைவுகளை, அதிர்வுகளை சிறப்பாக அடையாளமிட முடியும். படைப்பு மனோநிலைக்கும் வாழ்வின் சடங்குகளுக்கும் இடையில்  அலைவுறுகின்ற ஒரு பதகளிப்பு அவரது பிரதிகளில் நிறைந்துகிடக்கிறது.

வேதனைகளால் கரைகின்றன நிமிடங்கள் 
தமிழனின் ஆதிக்குடி பற்றியும் 
இந்த மண்ணுக்கு 
அவனே சொந்தக்காரனென்றும் சொல்லிக்கொண்டிருப்பதில் 
சலித்துப்போயிற்று என் பேனா 

நான் தமிழன் எனக்கொரு 
அடையாளம் வேண்டும் 
அதற்குக் கவிதை போதாது 
துப்பாக்கி கத்தி கோடரி 
ஏதாவது ஒன்று அல்லது மூன்றும் உடனே வேண்டும். 

என்று  1997 களில் எழுதிய எஸ்போஸ் 2000 களில் இவ்வாறு எழுதுகிறார்.

மனிதர்கள் மனிதர்களை அழித்தார்கள்
மனிதர்கள் காடுகளையும் மிருகங்களையும் அழித்தார்கள்
எங்கும் பாழ்வெளிகள் மிஞ்சின 
நான் சில எஜமான்களைப் பெற்றேன் 
புதிய நகரங்கள் 
புதிய வீதிகள் 
புதிய தோட்டங்கள் 
புதிய சுடுகாடுகள் எங்கும் எங்கும் 
அநேகமான வீதிகள் எங்குமே 
வெறிபிடித்த கண்கள் அலைந்தன 

எஞ்சியிருந்த எனது இருதயம்
என்னிலிருந்து 
இரத்தமும் தசையுமாக பிடிங்கி எறியப்பட்டது 
ஒன்பதாம் சொர்க்கத்தை நோக்கி 
. 

ஒரு கவிஞன் எதையெல்லாம் கடந்து தன் கவிதைக்கு வரமுடியுமோ அவற்றையெல்லாம் கடந்துவந்துகொண்டிருந்த ஒரு நாளில் எஸ்போஸ் என்ற கவிஞன் இல்லாமல் செய்யப்படுகிறான்.

அன்பு, ஏக்கம்,  தன்னிரக்கம் சுயபச்சாபம் என விரவிவரும்  கவிதைகளை இலகுவில் கடந்துவிட முடிவதில்லை. தமிழ்ச்சூழல் பாரம்பரியமாகவே அப்படியாக வளர்ந்துவிட்டது. அப்படியான வெளிப்படுத்தல்கள்  கொண்ட கவிதைகளும் உண்டு. ஆனால் அவை வேறு ஒரு வடிவங்கொண்டுள்ளன. தமிழ் சூழலிற்கு புதிதான ஒரு சொல்லல் முறையாக அவற்றை மாற்ற முயற்சித்திருக்கிறார்.     சிறுகதைகளும்,  நாட்குறிப்பு வடிவிலான குறிப்புகள் என்ற பத்தியும் சில கவிதைப்பிரதிகள் மீதான விமர்சனங்களும் அவர் கொண்டிருந்த இலக்கியப்போக்கினை வெளிப்படுத்துகின்றன. கவிதைகளின் வீச்சுக்கும், வெளிப்பாட்டுமுறைக்கும் ஏற்ப சிறுகதை பத்தி எழுத்துக்கள் இல்லாவிடினும், அவற்றை அந்த வெறுமனே கடந்துவிடவும் முடியாது. ஒரு காலநீட்சி கிடைத்திருக்குமாயின் அவர் முக்கியமான சிறந்த விமர்சகராக இருந்திருப்பார். தன் சமகாலத்தில் இயங்கிய படைப்பாளிகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும், கரிசனமும் அவர்களுக்கான ஒரு தளமாகவேனும் தன் இலக்கிய சஞ்சிகை இருந்திட வேண்டும் என்ற அவாவும், கூடவே போர்க்கால அலைவுகளினால் ஏற்படுகின்ற இயலாமையும் சலிப்பும் அவருடைய குறிப்புக்களில் மிகுந்திருந்ததையும் காணலாம்.  கவிதைகளுடாக எஸ்போஸினை நாம் அடையாளப்படுத்துவதென்றால், அதே காலப்பகுதியில் வ.அய் ஜெயபாலன், சோலைக்கிளி, சுகன், நிலாந்தன், பாலகணேசன்  போன்ற கவிஞர்களின்  கவிதைகளையும் அதன் தனித்துவ அடையாளங்களையும் இணைத்து குறிப்பிட்டே ஆகவேண்டும்.


எஸ்போஸ் குறித்த நண்பர்களின் பதிவுகள் அவரது மரணம் நிகழ்ந்த காலங்களிலும் அதற்கு நெருங்கிய காலங்களிலும்  அவர் குறித்து எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன ஒரு சில தவிர்த்து. அவைகள் அன்றைய மன வெளிப்படுத்தல்களையே கொண்டிருக்கின்றன. அவைகளோடு சேர்த்து   சமகாலத்திலிருந்தும் எஸ்போஸ் மீதான பார்வையினை நண்பர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.  யுத்தம் முடிவுற்ற இந்தக் காலத்தில், யுத்தம் பற்றியும், யுத்தமறுப்புக் காலம் பற்றியும், யுத்தமறுப்பாளர்களால் நிகழத்தப்பட படுகொலைகள் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்துக்கள் எவ்வளவு முக்கியமானவை என்று அடையாளமிட்டிருக்கமுடியும். 


எஸ்போஸ் படைப்புக்கள் என்ற இந்த தொகுப்பு  குறித்த ஒரு உரையாடலுக்கான  வெளியினை நாம் உருவாக்கவேண்டும். எம் சூழலில், புலம்பெயர் தமிழ் இலக்கிய தளத்திலும், புலத்திலும் குறிப்பிடத்தக்களவு தொகுப்பாக்கங்கள்  நடந்துள்ளது.   ஒரு நீண்ட செயற்பாட்டியக்கம் ஊடாக  அந்த கால  இலக்கியப் போக்குகளை வெளிக்கொண்டுவரும் பல தொகுப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால்  அவை இலக்கியத் தளத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தினவென்று பார்த்தால்,  அல்லது  குறைந்த பட்சம்  அந்த தொகுப்புகள் குறித்த உரையாடல்களைப் பார்த்தால் அவை குறித்து எதுவுமே நிகழ்ந்திருக்கவில்லை. இந்த நிலையை இந்த தொகுப்பும் பெற்றுவிடக்கூடாது. 

ஒரு போர்க்கால சூழலை, அதன் உள்ளிருந்து அனுபவித்து உருவாகிய படைப்புக்கள் இவை. யுத்த நிலமொன்றின் அவலங்களை, அது சுமத்திய வன்முறை மற்றும்  அதிகாரங்களை பேசுகின்ற, கேள்விகுற்படுத்துகின்ற படைப்புக்கள் இவை. வெறுமனே “யுத்த இலக்கியங்கியங்கள், போர்க் கால அறிக்கைகள்” என்று நிராகரித்துவிடும் இன்றையில், அந்த யுத்த நிலத்தில் நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட இலக்கிய, கலைவடிவங்களை  இன்றையில் மீள நோக்கவேண்டிய தேவை எம் முன்னே இருக்கிறது. வெறுமனே அதிகாரங்களுக்கும், பதவிகளுக்காவும் யுத்தகாலத்தில் இலக்கிய கலை படைப்புக்கள் நிகழ்ந்திருக்கவில்லை மாறாக, எஸ்போஸ் போன்ற படைப்பாளர்கள்  நிகழ்த்தப்பட்ட எல்லா அதிகாரங்களை எதிர்த்தும் இயங்கியிருக்கிறார்கள் என்பதனையும், அதே யுத்தகாலத்தில், யுத்தமில்லாத நிலமொன்றில் இருந்துகொண்டு போரிலக்கியம் செய்தவர்களின் இலக்கிய பவுத்திரங்களையும் கண்டுகொள்ள இதுபோன்ற தொகுப்புகள் அவசியமானவை.

எஸ்போஸ் தனது  படைப்புக்களை ஒருமுறையாவது தொகுப்பாக்கம் செய்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகள் வந்த போது கூட தவிர்த்திருக்கிறார். எம் முன்னே ஒரு வரலாறு இருக்கிறது முனியப்பதாசன், சிவரமணி  போன்றவர்கள் தம் பிரதிகளை எரித்து அழித்திருந்தனர். அது  ஒரு படைப்பு மனதின் உன்மத்த நிலையது எனலாம். பிரதிகளை தொகுப்பாக்கம் செய்யாதிருப்பதும் கூட அவ்வாறானதொரு நிலையாகவே உணரமுடியும். இப்படியான இயல்பினைக் கொண்டவராகவே எஸ்போஸ் எல்லோராலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.


ஈழ இலக்கியத்தளத்தில் எழுத்துமுறையிலும், செயற்பாட்டியக்கம் சார்ந்த நிலையிலும் முக்கியமான இடம்  எஸ்போஸ்க்கு இருக்கிறது. அனைத்து  அடக்குமுறைகளுக்கு எதிரான குரலைப் பதிவு செய்தவன் என்ற ரீதியில் அந்த முக்கியத்துவம் இன்னமும்  அதிகமானது.  கால நீட்சியில் அழிந்துவிடாமல் அந்தக் குரலை தொகுப்பாக்கம் செய்யும் முயற்சியில் 2008 ஆண்டு தொடக்கம் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்த எஸ்போஸின் நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  படைப்புக்களை திரட்டுவதும் தொகுப்பதும் அதனை பதிப்பு செய்வதும் இலகுவான ஒன்றல்ல. எஸ்போஸின் நண்பர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தான் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. இத்தோடு நின்றுவிடாமல்  தொகுப்பு குறித்த உரையாடல்களையும், எஸ்போஸ் படைப்புக்கள் குறித்த ஆய்வுகளையும் செய்யவேண்டிய பொறுப்பும் எம் முன்னேதான்  இருக்கிறது.

பேனாவை  நம்பிய ஒரு இலக்கிய சமூக செயட்பாட்டாளனை ஆயுதத்தால் எதிர்கொண்டவர்களைக் கொண்ட சமூகமாக நாம் இருப்பதில் வெட்கித்துக்கொள்ளத்தான்  வேண்டும்.  கூடவே ந்தவொரு புள்ளியிலும் யாரால் அவன்  இல்லாமல்  செய்யப்பட்டான் என்பதை மறைத்துக் கொண்டே இருப்பதற்கும். அந்த அதிகாரத்திற்கு பணிந்து போவதற்கும்.1 comment: