Monday, 15 October 2012

வேர்கள் அ(ழு)லைகின்றன


மழைக்கூதல்
தேகம் தீண்டிப்பரவியவள் 
சோம்பல் கலைத்தது.

கிளைகளின்  ஆலாபனை
இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு 
கடகத்துள் கிடந்த நாயின் முனகல் 
கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென,
அறிகுறிகளால் அவஸ்த்தைகளை 
உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.

அள்ளிவந்திருந்த 
கொக்காரை பன்னாடைகளை
தாவரத்து ஓரம்தள்ளி 
மழைநீரேந்த பானைகளை அடுக்கி,
தூவானம் தொடாதவிடத்தில் 
காயாத ஆடைகளை கட்டி,
உவனிக்காதவிடம்  பார்த்து 
அடைக்கோழியின் கூட்டையரக்கி, 
பெருமூச்சுடன் வான்பார்க்கையில் 
விழுந்தது துளிகள் முகத்தில்.

பாத்திரங்களில் ஒழுக்கு நீர் 
ஒசைலயத்துடன் விழ,
தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம் 
சாம்பலற்ற அடுப்போரம் 
வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்.
சன்னங்கள் துளையிட்ட சுவரில் 
ஈரத்தின் நரம்புகள் பரவத்தொடங்கின.
சட்டமிடப்பட்ட மகனின் படத்தை 
கழற்றியிருபுறம் துடைத்தாள். பார்த்தாள்.
கேணல் சுடரவன்.
தடவினாள் சுருக்கம் விழுந்த
விரல்களால் பெயரை.

செய்தி ......................................!!!!
மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள்
புலம்பெயர் தேசங்களில் வெகுவிமர்சையாக 
மேற்கொள்ளப்படுகின்றன.
14 comments:

 1. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வலி கவி படிக்கையில் பரவுகின்றது நண்பா. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வலிக்கவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நினைவுறுத்துவதற்காக எழுதினேன்.
   நன்றி உறவே

   Delete
 2. மனம் கனத்த வரிகள்...

  முடிவில் இப்படி... (செய்தி)

  ReplyDelete
  Replies
  1. இதுதான் இங்கே நிஜமாக இருக்கிறது நண்பரே ..............வரவுக்கு நன்றி

   Delete
 3. "சன்னங்கள் துளையிட்ட சுவரில்
  ஈரத்தின் நரம்புகள் பரவத்தொடங்கின.
  சட்டமிடப்பட்ட மகனின் படத்தை
  கழற்றியிருபுறம் துடைத்தாள். பார்த்தாள்."

  உள்ளம் விம்மும் வரிகள். ஆனாலும் அழகானவை.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்துக்களும்,வரவுகளும் என்றும் என் இருத்தலை ஊக்குவிக்கும் நன்றி ஐயா.

   Delete
 4. நல்ல வரிகள்
  வாழ்த்துக்கள் உங்கள் தள்ளாடும் கொடிமரங்கள் ஞாயிறு தினக்குரலில் வந்திருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பனே ...................,ம்ம் சொன்னார்கள் இன்னும் பார்க்கவில்லை.இங்கே செவ்வாய் தான் கிடைக்கும் பத்திரிக்கை.
   நன்றி நண்பா

   Delete
 5. வலி மிகுந்தக் கவிதைகள்...

  அருமை, என் முதல் வருகை இது...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நண்பரே, உங்களின் வருகை கண்டு உளம் மகிழ்கிறேன்.
   இரவுகளின் புன்னகைகள் அழகாவை.அமைதியானவை.இனிமையான பெயர்.
   நன்றி நண்பரே கருத்திடலுக்கு

   Delete
 6. இன்றும் எத்தனை தாயுள்ளங்கள் இந்நிலையில்..........
  ....வலிக்கும் வரிகள். தொடருங்கள் உங்கள் திறமைகள் மங்கி விடாதிருக்க .

  ReplyDelete
  Replies
  1. நன்றி அக்கா,எனை ஊக்குவித்த இன்னொரு உறவு நீங்கள்.உங்களின் வருகையால் மிக மிக மகிழ்கிறேன்

   Delete
 7. அருமை உங்கள் வரிகளில் உண்மைகள் உறைக்கின்றது உணர்வுகள் அழுகின்றன வாழ்த்துகள் தொடருங்கள்

  ReplyDelete
 8. ///வாயிலேதுவுமின்றி வரிசையிட்டன எறும்புகள்./// கொடிய வறுமையைக் காட்ட இதைவிட வேறு சொற்களும் உண்டோ... உணர்வின் வலியை வெளிப்படுத்தும் உண்மை வரிகள்... படைப்பாளிக்குள் குடியிருக்கும் பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கிறது... பாராட்டுக்கள்...

  ReplyDelete