Tuesday 4 December 2012

யாதொன்றினதும் கைதிகள் அல்ல.............


நிலம்கீறி வெளிவரும் 
முளையங்களாய் 
புலன்கீறி விழுமென்  வார்த்தைகள் _என்றுமே 
யாதொன்றினதும் கைதிகள் அல்ல,

ஒப்புக்காகவும் 
ஒப்பனைக்காகவும் 
அலங்கரித்துக்கொண்டவை என்றோ,
கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ,
தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, 
சட்டமிடவும் இயலவில்லை.

சில இரவுகளில் நிகழுமிந்த 
ஒளிப்பகுப்பில்_என் 
அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது.
அந்த கணங்களில்,
அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் 
தேவதைகளின் கொலுசுகள் 
ஓசைலயமிடுகின்றன.

ஆழ்ந்த பெருமூச்சுக்களை  
வெளியேற்றும்_இந்த 
பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் 
ஆத்மதிருப்தியின் வாசம் 
அலாதியானது. அமைதியானது.

இதுவெல்லாம் 
எனக்கானது. 
நீ என் 
இடத்தில் இருந்தால் உனக்கானது.

இப்படித்தான் 
கடந்துபோக முடிகிறது 
காலங்களையும் கவிதைகளையும் 
உன்னால் என்னால் அவர்களால்  

தெருவோரத்தில் விழுந்த சில்லறை 
கண்டுகொள்ளப்படாமல் புதைந்தும் போகலாம்.
பெறுமதி சிதைந்து போனதில்லை.
இவன்  கவிதைகளும் தான்!!!!

9 comments:


  1. தெருவோரத்தில் விழுந்த சில்லறை
    கண்டுகொள்ளப்படாமல் புதைந்தும் போகலாம்.
    பெறுமதி சிதைந்து போனதில்லை.
    இவன் கவிதைகளும் தான்!!!! /////

    படைப்பாளிகளின் நிலமையும் இதுவே ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள் நேற்கொழு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமகன்.
      என்ன செய்வது, பணபலமும், பிரபலங்களின் உதவியும் இருந்தால் தூக்கி கொண்டாடும் சமூகமல்லவா எமது.
      வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகுந்த நன்றிகள்.

      Delete
  2. இதுவல்லவோ கவிதை...
    ரசித்துப் படித்தேன் கவிஞரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா, ரசிக்கும் படி எழுதி இருக்கிறேனா? அப்படி இருந்தால் எனக்கும் சந்தோசம் தான்.

      Delete
  3. நிலம்கீறி வெளிவரும்
    முளையங்களாய்
    புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே
    யாதொன்றினதும் கைதிகள் அல்ல,////

    இந்த நாளுவரிகள் போதுமோ, கைகூவாக அல்ல, ஆயிரம் அர்த்தங்களை தெரிவிக்க
    "என்றுமே
    யாதொன்றினதும் கைதிகள் அல்ல",

    சொற்கள் ஒவ்வொன்றும் முத்துக்களாய் மிளிர்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.மிக நீண்டநாளின் பின் உங்களின் கருத்திடல் கண்டேன்.சந்தோசம் நன்றி வரவுக்கு

      Delete
  4. சொற்சுவைமிக்க கவிதைகள் படைப்பதில் நெற்கொழுத்தாசன் இன்னொரு பரிமாணங்கள் கூடிச் செல்கின்றார் இந்தக்கவிதையிலும்!வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அஹா, நேசன்னா நன்றிகள். வேண்டாம் விடுங்க. இவன் சின்னப்பொடியன் .............தாங்க மாட்டான்
      நன்றி வரவுக்கும் கருத்திடலுக்கும் .

      Delete
  5. //தெருவோரத்தில் விழுந்த சில்லறை
    கண்டுகொள்ளப்படாமல் புதைந்தும் போகலாம்.
    பெறுமதி சிதைந்து போனதில்லை.
    இவன் கவிதைகளும் தான்!!!!//
    நம்பிக்கையின் வரிகள்...சோர்ந்து தலை கவிழ்ந்து போகும் எழுத்தாளர்களுக்கான மருத்துவ வரிகள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete