Monday 11 November 2013

ஒரு குற்றப்பத்திரிக்கை

தன்னைக் கொன்றவனின் 
வாக்குமூலம் ஆராய்தலின் பின்
தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது.

அங்கு,
தன்னைக் கொன்றவனின்
வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது.
தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள்
வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு
எப்படிப் புரிந்திருக்கும் ?

தன்னைக் கொல்லுதல்
மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம்.
மை கரைவது போலவும் இருக்கலாம்.
ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம்.

தன்னைக்கொன்றவனின்
கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை,
அவன் சுமந்திருந்த
தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை.
அவன் உருவாக்கிய
வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை,
ஆனாலும்,
தன்னைக்கொன்றவனைத்
தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல,

அவனுக்கு
அந்த நேரத்தில் தேவையாக இருந்திருப்பது
ஒரு உச்சபட்ச விடுதலை.
அது தன்னை
தன்னிலிருந்தும்
பிறரிலிருந்தும்
விடுவித்துவிடுமென்று  நம்பியிருக்கலாம்.

தன்னைக் கொல்லுதலூடாக
அவன் தன்னை விடுவித்தாலும்
நீங்கள் உங்கள்
குற்றங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.



3 comments:

  1. மிக மிக அற்புதம்
    மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்

    அருமையான பதிவில் நல்ல கருத்துக்கள்..வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete