Thursday 28 April 2016

பலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் ?

  
 "உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக  மாறவேண்டும் "--பெரியார் 

      தனித்தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன்  ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம்,  நவீனம்  என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி  சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது.

 மரபுரிமை, பண்பாடு, கலாசாரம் என்ற இசங்களை ஒரு சமூகமானது அவ்வப்போது களைந்துகொள்வதும், இயங்கியலின் தன்மைக்கு ஏற்ப அவைகளை மாற்றியமைப்பதுவும் தான் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதன் குறியீடாக இருக்கமுடியும். சமூக எண்ணக்கருக்கள் மூடுண்ட நிலையில் இருக்குமென்றால் சமூக சிந்தனையும், செயலும் மூடுண்ட நிலையிலேயே இருந்துவிடும். தேசவழமைச் சட்டம் எமது மரபுரிமை என்று கூறிக்கொண்டு, அதில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலையிலேயே வைத்திருக்கிறோமா? சமூக மாற்றத்திற்கேற்ப மாற்றங்களூடாக இன்று தேச வழமைச்சட்டம் என்பது காணி,சொத்துரிமை தொடர்பிலானதாக மட்டும் காணப்படுகிறது. கலாசாரம் பண்பாடு என்ற இசங்களை கேள்விக்குற்படுத்தும் அதிகாரங்களை இங்கே கோரவில்லை. இப்பத்தி எழுப்புகின்ற கேள்வி  எமது சமூகம் ஒரு அசைவியக்கம் கொண்ட சமூகமா  இல்லையா என்பதே.

தெய்வ வழிபாடுகள் எவ்வகையான  மாற்றங்களை  உள்வாங்கி இருக்கின்றன என்பதை ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் வளர்ச்சியோடும்  கலாசர பண்பாடு மாற்றங்களோடும் இணைத்தே பார்க்கமுடியும். அதற்காக தெய்வ வழிபாடுகள் சிறப்புற்ற இடங்கள் எல்லாம் வளர்ந்தன என்று வாதிடமுடியாது. சமூக வளர்ச்சி பன்முகமானது. இதுதான் வழிபாடு நிகழ்த்தும் தளங்களுக்கும் கொல்களங்களுக்குமான (இறைச்சிக் கடை ) நுண்மையான வேறுபாடு.

தெய்வங்களுக்கான பலியிடல் என்பது என்ன நோக்கத்திற்காக ஆதி மனிதர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இது வெறுமனே இந்துசமயத்தினதோ அல்லது எம் சிறுதெய்வ வழிபாட்டினதோ அல்ல. அனைத்து இனக்குழுமங்களுக்குமானதாகவே இருந்திருக்கிறது. தான் சார்ந்த நிலத்தில் வாழ்வியலை எதுவித இடையூறுகளும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு இறைவனை அல்லது தன்னை மீறிய சக்தியினை திருப்திப் படுத்தும் நோக்கில் இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது. எமது வாழ்வியலை நாமே திட்டமிடும் பகுத்தறிவு பெற்ற நாம் இன்று என்ன நோக்கத்திற்காக, யாரை திருப்திப்படுத்துவதற்காக, இந்த பலியிடலை தொடரவேண்டும்?

ஆதியில் உயிர்ப்பலி என்பது  குறைகளற்ற ஆணை, அல்லது கன்னிப் பெண்ணை பலியிடுவதாகவே இருந்திருக்கிறது. பின் காலநீட்சியில் குழந்தைகள் பலியிடப்பட்டு,   இப்போது மிருகங்களாக வந்தடைந்துள்ளது. இப்போதும் சில இடங்களில் குழந்தைகளை பலிகொடுக்கும் இழிவு நடைபெற்றுவருகிறது என்பதை பதிவு செய்யவேண்டிய அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம். இவையெல்லாம் இன்றைய பலிகொடுத்தலின் தொன்மங்களாக  கண்முன் வந்து நிற்கின்றன. இன்று நேற்றல்ல, பலியிடல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன .திருத்தொண்டர்புராணம் முதல் மறைமலையடிகள் வரை இவற்றை காணலாம். இன்றும், மிருகங்களைதானே பலியிடுகிறோம் என்று நாம் சிந்திக்க தலைப்பட்டால் நாம் நம்மை மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதுமில்லை.

பெண் தெய்வங்களுக்கு கருத்தரித்த மறி ஆட்டினை பலி கொடுக்கும் வழக்கம் ஒரு சடங்காக, மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது. இதனை சூலாடுகுத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைப்பார்கள் (பண்பாட்டு அசைவுகள் தோ. பரமசிவன் )நேர்ந்துவிடப்படும் ஆட்டை இணை சேர விடுவதில்லை. விதிவிலக்காக பலி கொடுக்கப்படும் நாள் அல்லது அதற்கு முதல் நாள் இணைசேர்ப்பவர்களும் உண்டு. இதை நல்லின ஆடுகள் உற்பத்தியினை பெருக்கும் செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா?  நேர்த்தி ஆடுகள் வளர்ப்பு முறையானது பொருளாதார  நோக்கினைக் கொண்டதும் தான். பொதுவாக ஆட்டினை வளர்த்தவர்கள் சாப்பிடமாட்டார்கள். (இதுவும் மரபு, பண்பாடு சார்ந்தது. இன்று எப்படியோ தெரியவில்லை) ஆகவே அவர்கள் நோக்கம் பலியாக வெட்டப்படும் ஆடுகளை உயர்ந்த விலைக்கு விற்றுவிடுதல் தான். பலி கொடுக்கும் நிகழ்வு முடிந்து பேரம் பேசும் நிகழ்வை அவதானிப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்.

யாருடைய உரிமைகளையும் மறுப்பதோ நிராகரிப்பதோ நோக்கமல்ல. யாரையும் காட்டுமிராண்டிகள் என்று வரையறை செய்வதில் சிறிதும் உடன்பாடில்லை, ஒவ்வொரு மனிதரின் உரிமைக்காகவும்  குரல் கொடுப்பதே சிறந்த மனிதப் பண்பும் ஆகும்.

நாட்டார்மரபு அல்லது குல ஒழுக்கம் அல்லது இனக்குழும ஒழுக்கம் என்பதனை, வாழும் பருவ சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருட்கள் ,உற்பத்தி பொருளாதார நிலைகள், சமூக உறவுநிலைகள் போன்ற பல சமூக இயங்கியல் காரணிகள் தீர்மானிக்கின்றன. காலநீட்சியில் இவை மாறிவிடும் என்பது யதார்த்தமானது. வெளிப்படையானது. இன்றும் பல ஆலயங்களில் பலி கொடுத்தல் நிகழ்வு ஒரு சடங்காக  நடைபெறுகிறது. அங்கு உயிர் காவு வாங்கப்படுவதில்லை. நீதிமன்ற பரிசோதனைகளும் இல்லை. வெறுமனே மஞ்சள் ண்ணியோ, பூவோ, பொட்டோ இடுவதுடன் அந்த சடங்கு முடிவுறுகிறது. இது மாற்றம்தான். உடன்கட்டை ஏறுதல் இல்லாமல் போய் ஒரு கோழி முட்டையைப் பிணத்துடன் எரிப்பதில் நிற்கிறது. இதுவும் நாளை மாறக்கூடும். அதற்காக இந்தப் பலிகொடுத்தல் நிகழ்வு தன்னியக்கமாக மாறும் என்று காத்திருப்பதும்  தவறானது.  அதேவேளை சட்டம் அல்லது வன்முறை மூலம் இந்த மரபினை நிறுத்தும் அதிகாரம் என்பதுவும் கேள்விகுற்படுத்தப்பட வேண்டியதே.  பன்முகப் பண்பாட்டு படிநிலையில் இதனை நாங்கள் புறநிலையாகத்தான் பார்க்கவேண்டும். மிருகங்கள் உலகத்தில் உள்ளன. மனிதன் உலகத்தில் மட்டுமல், உலகத்தோடும் உள்ளவன். மனிதசமூகம் ஒற்றைப் பரிமாணத்தில் சிக்கிக்கொள்வதிலை. மனிதன் இயற்கையைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறான். விலங்குகள் இயற்கைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன.   நாங்கள் மனிதராக இருக்கப்போகிறோமோ என்பதே கேள்வியாகிறது.

இந்த இடத்தில், வல்லிபுரக் கோவில், செல்வசந்நிதி , கற்கோவளம் பேச்சியம்மன் ஆலய சூழலையும்  நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பது யாழ்ப்பாண சமூக இயங்கியலில் தெய்வங்களின் அல்லது ஆலயங்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள உதவலாம். இதில் பேச்சியம்மன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் "மச்சப்படையல்" நிகழ்வு முன்னர் நடைபெற்றுவந்திருந்தது. இது மிருகபலி நிறுத்தப்பட்டு வேறு ஒரு இடத்திலிருந்து மாமிசஉணவு வகைகளைக் கொண்டுவந்து சமைத்து உண்பதாக மாறி இருக்கிறது. அம்மன் பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் மாறிவிட,  தற்போது ஆலய வளவில் இருந்து குறிப்பிட தூர இடவித்தியாசத்தில் வேறு ஒரு பேச்சியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செல்வச்சந்நிதி ஆலயம் அது சார்ந்து இயங்கும் பண்பாட்டுத்தளம் இன்னொருவகையில் முக்கியமானது. ஒடுக்கப்பட சாதியினரால் நடத்தப்படும் பூசை நிகழ்வுகளில் எல்லோரும் சமமாகக் கொள்ளப்பட்டு உற்சவம் செய்பவரும் தன்னை ஒரு வணங்கியாகக் கருதிப் பூசை செய்யும் நிகழ்வு நடைபெறும்.(விரிவாக பார்க்க யாழ்ப்பாணம்.சிவத்தம்பி )  இவை இரண்டு எடுத்துக் காட்டுகளே. சமூகபண்பாட்டு நகர்வில் ஆலயங்கள் எவ்வகையில் பங்களிக்கின்றன என்பதனை இவற்றினூடாகவே புரிந்துகொள்ளமுடியும்.

வேள்வியை தடை செய்யக்கோருவது  இந்துத்துவவாதிகள் அல்லது உயர்ஆதிக்க சாதியினர் ஆகவே இதனைச் சாதிஅரசியல் சார்ந்தே நாம் அணுகவேண்டும் என்ற கருத்துருவாக்கமும் இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டியதே. முதலில் பொருளாதார நிலைப்பட்ட யாழ்ப்பாண மூகம் இந்துத்துவ சமூகமாக இல்லை என்ற பெரும் உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். வெள்ளாள மேலாண்மை கொண்டதாகவே இருக்கிறது. இதில் சம்ந்தப்பட அந்த ஆலயம் சூழ்ந்த அல்லது அந்த ஆலயத்தினை நிர்வகிக்கின்ற சாதியினர் யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறானதொரு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது. வீரசைவர் என்ற அந்தச் சமூகம் ஒரு படிநிலை ஆதிக்க சமூகம் தான்.

மிருகபலி என்பதை எதிர்க்கும் அதே மனநிலையில் நின்றுதான் சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிகழ்வுகளையும் எதிர்க்கவேண்டி இருக்கிறது. அரசினை நிராகரித்தல் என்பதற்காக அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிராகரித்துவிடுதல் ஏற்புடையதல்ல.  இது  பதில்களை வைத்துக்கொண்டு கேள்விகளை வரைவது போன்றதாகும். சட்டவிதிகளை மீறிப் பெரும்பான்மை அல்லது மாதிரி என்ற சொல்லாடல்களைக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது என்று எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

இந்த மிருக பலியிடலை வெறுமனே சாதியப் பிரச்சனையாக சுருக்கிவிட முடியாது. இதன் அகக்கூறுகளை நோக்கவேண்டும். அதன் விளைவுகளை இனம் காணவேண்டும். அதன் பன்முகத்தன்மையினை இனம் கண்டு கேள்விக்குற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே மிருகபலியிடல் கொண்டிருக்கும் பண்பாட்டு அரசியலை வெளிக்கொண்டுவர முடியும். இங்கு பண்பாட்டினை மீறக் கோருதல் என்பது பண்பாட்டை முற்றாக மறுப்பதன் மூலம் மீறுதல் அல்ல, பண்பாட்டின் கூறுகளை மறுப்பதால் மீறுதல் என்பதுதான். ஒரு இனக்குழுமத்தின் பண்பாட்டின் சில கூறுகளை நீக்கம் செய்வதினூடாகப் பண்பாடு அழிந்துவிடப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் பண்பாட்டிசம் காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருப்பதும் வெளிப்படையானது. நாம் ஈழத்தமிழ் இனத்தின் காலத்திற்கு ஒவ்வாத பண்பாட்டின் கூறுகளைத் தான் நீக்கம் செய்ய வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம்.

உயிர்ப்பலி வழிபாட்டுமுறையானது, ஒடுக்கப்பட்ட சாதியினரது உரிமை. இதனை நிறுத்துவது அவர்களை மேலும் ஒடுக்குவதாகவே அமையும்  என்ற கருத்தினை உடைத்தெறியவேண்டியது அவசியமானது. தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மரபுகளைக் கைக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க நிர்ப்பந்திக்கும் ஆதிக்கசக்திகளின் ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே இதனைக்கொள்ள முடியும்.

 மொழி. கலாசாரம். பண்பாடு  என்ற ஒவ்வொரு சமூகத்தின் கூறுகளிலும் மதம் விரவிக்கிடக்கிறது. அதன் வேர்கள்  மூலம் ஒவ்வொரு தளத்தினையும் பற்றி வைத்திருக்கிறது. இவற்றினை அனுசரித்தே ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நிகழ்த்தமுடியும். அது நவீனத்தின் முழுமையான மத நீக்கமாக இருக்கமுடியாவிட்டாலும், நவீன சமூகமயப்பட்ட, நவீன பண்பாட்டு வயப்பட்ட மாற்றமாக இருக்கவேண்டியது அவசியமாகும். 




1 comment:

  1. நன்றாக அலசி உள்ளீர்கள்

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete